இராதே

இராதே
eradevadassou

சனி, 30 நவம்பர், 2013

உயிர்க்கொல்லி ( எய்ட்சு ) - எண்சீர்

          காமத்தால்  கன்னியரின்  கைக்குள்  சென்றேன் ;
                    கண்டுருகும்  அழகினிலே  இதழை  மென்றேன் ;
          ஊமத்தம்  உண்டதுபோல்  பித்தம்  ஏறி
                    ஊர்சுற்றும்  மாதர்களை  விருந்தாய்த்  தின்றேன் ;
          நாமக்கல் ,சேலமெலாம்  கூடிச்  சென்று
                    நங்கையரின்  இச்சைக்கே  இசைந்தே  நின்றேன் ;
          நாமமது  கெட்டதுதான்  மிச்சம் !  மிச்சம் !
                    நலிந்தவுடல்  கண்டதுதான்  வைரஸ்  எச்சம் !


          பெற்றோர்க்கும்  பிடிக்காத  பிள்ளை  யானேன் ;
                    பேசாத  பேச்சுக்குப்  பொருளு  மானேன் ;
          உற்றார்க்கும்  உறவினர்க்கும்  பகையு  மானேன் ;
                    ஊருக்குள்  விளங்காத  குடியு  மானேன் ;
          கற்றார்க்கும்  பாவலர்க்கும்  கருவா  யானேன் ;
                    கருத்தில்லாச்  சிந்தைக்கே  இடமு  மானேன் ;
          மற்றவர்கள்  மதிக்காத  மடைய  னானேன் ;
                    மாசுடைய  வீணையதன்  இசையு  மானேன் !


          நிலவில்லா  வானானேன் ;  நானே  இன்று
                    நிறமில்லா  மலரானேன் ;  வெளியே  செல்ல
          நலமில்லா  நோயானேன் ;  மருந்தே  இன்றி
                    நடமாடும்  பிணமானேன் ;  சருகாய்  ஆனேன் ;
          உலகெல்லாம்  சிரிக்கின்ற  உருவ  மானேன் ;
                    உருக்குலைந்த  எலும்புகளின்  கூடு  மானேன் ;
          வளமான  இளமையினைக்  கருக்கி  விட்டு
                    வாட்டுகிற  நோயதற்கே  இரையு  மானேன் !


          ஆணுக்கும்  பெண்ணுக்கும்  முறையில்  லாத
                    ஆடுகிற  ஆட்டத்தின்  உச்சத்  தாலே
          ஊனுக்குள்  குருதியதன்  ஓட்டத் துள்ளே
                    ஊடுருவி  வந்துவிட்ட  அரக்கன்  வைரஸ்
          பேணுகிற  வெள்ளையணு  அதனைக்  கொன்று
                    பெருகுகிற  நோயெதிர்ப்பை  மெல்லச்  சாய்க்கும் ;
          காணுகிற  பிணியெல்லாம்  வளரும்  ஓங்கும்
                    கண்டபடி  ஆதிக்கம்  செலுத்தும்  ஏய்க்கும் !

          தடைபோட  முடியாத  ஆசை  யாலே ,
                    தவறிழைத்தே  துன்பங்கள்  கண்ட  தாலே ,
          உடைகூட  அணிந்திடவே  இயலா  தாகி
                    ஊட்டமிலா  மெலிந்தவுடல்  வாட்டங்  கொள்ள
          எடையெல்லாம்  குறைவாகி  மேனி  தேயும் ;
                    எளிதான  இருமலுக்கே  படுக்கை  காணும் ;
          நடைபோட்டே  எலும்புருக்கி  உடனே  தொற்றும் ;
                    நாட்பட்ட  காய்ச்சலுமே  தொடரும்  வாட்டும் !


          வேசிகளின்  பழக்கத்தால்  வருதல்  சொன்னேன் ;
                    வேறுசில  வழிகளுமே  இருத்தல்  சொல்வேன் ;
          ஊசிகளின்  பயன்பாட்டால்  வருதல்  உண்டே ;
                    உடல்மாற்றும்  குருதியினால்  வருதல்  உண்டே ;
          தூசுக்கும்  கொசுவுக்கும்  வருவ  தில்லை ;
                    தும்மலாலும்  இருமலாலும்  இல்லை  தொற்று ;
          யாசித்துப்  பெற்றுவிட்ட  எயிட்சி  னாலே
                    ஏக்கத்தால்  வாழ்க்கை யினை  இழக்கக்  கண்டேன் !


          பதறாத  செயல்களெலாம்  சிதறா  தென்பார் ;
                    பக்குவமாய்  உயிர்க்கொல்லி  நோயைப்  போக்கக்
          கதறாமல்  பாசமுடன்  கருணை  வேண்டி ,
                    கனிவான  நட்புணர்வைப்  பெறுதல்  வேண்டும் ;
          இதமான  உடற்பயிற்சி  நாளும்  வேண்டும் ;
                    இயற்கையதன்  அழகினையே  சுவைத்தல்  வேண்டும் ;
          பதமான  மருத்துவத்தில்  பலனைக்  கண்டு
                    பலமான  எயிட்சினையே  எதிர்ப்போம் !  வெல்வோம் !


          தேனூறும்  மனையாளிடங்  காணும்  இன்பம் ;
                    தேவடியாள்  மனைசென்றால்  கிடைக்குந்  துன்பம் ;
          வானுடைய  புகழ்கொண்ட  தமிழர்  பண்பு ;
                    வழித்தவறிப்  போவதினால்  இழக்கும்  அன்பு ;
          மானுடனே  மதியிழந்து  தவற்றைச்  செய்து
                    மறுதலித்துப்  போனவரின்  வருத்தங்  கண்டு
          நானுடனே  நல்லதமிழ்  இசையைக்  கூட்டி
                    நடப்பறிந்தே  நலங்காண  விருத்தங்  கண்டேன் !
                                                                                                                                       -இராதே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக