இராதே

இராதே
eradevadassou

செவ்வாய், 31 டிசம்பர், 2024

சிறை

 காத்துவாரியை

வெறித்தபடி இருந்தேன்


சிலந்தி பின்னிய வலையில்

சிறைபட்டிருந்தது

பிறைநிலா


காற்று வீச

பிணையில் வருமா நிலவு ?

சிந்தனைகள் நேரங்களை

இழுத்து சென்றன


விண்மீன்கள்

கூடிகூடி பேசியவாறு இருந்தன

மேகங்கள் அங்கும் இங்கும்

அலைமோதித் திரிந்தன


நீளும் இரவில்

நீள்வட்டத் திரையை மறைத்தது

கண்மூடும்

என் இமைகள்


                                      -  இராதே

ஆறு

 மல்லாந்து படுத்திருந்தேன்


பாறையின் இடுக்கில்

தொடமுடியாத இடத்தில்

தொங்குந் தேன்கூடு


எப்பொழுது வேண்டுமானாலும்

விழலாம்

காத்துக் கொண்டிருக்கிறது

பழுத்தோலை


கூட்டைத் தாங்கும் கிளையில்

முட்டையைத் திருட 

ஊர்ந்து நெளியும்

பாம்பு


கலையா கருமேகங்களின் நிழல்

பைய வருடிச் செல்கின்றன


நிமிர்ந்து அமர்கிறேன்


இதையெல்லாம்

சட்டை செய்யாமல்

கடமைக்கு ஓடிக்கொண்டிருந்தது

ஆறு


                           -  இராதே

புரிதல்

 ஒரு கூவலுக்கும்

ஏழெட்டு கூவலுக்கும்

சட்டென நிறுத்தி தொடர்கிறது


கேட்டு வெகுநாளாகி இருந்தது

அதிகாலை வேளையில்

குயில் பேசும் 'கமுக்கமொழி'


இங்கு பேசுபவைகளையே

புரிந்துகொள்ள முடியவில்லை


குயில்மொழிக்கு

எங்கே பொருள் தேடுவது ?


புரியாதவர் உலகில்

புரிந்து கொள்ளாதவர் இடையே

புரிந்து கொண்டார் போல

மொழிவது தான்

சரியான புரிதல்


            -  இராதே

நேசம்

 பறித்து எடுத்து

சூடுகிறாள்

இடந்தவறி விழுகிறது

ஒற்றை மலர்


பிஞ்சு கைகளென

ஏமாந்தது தான்

மிச்சம்


கால்பட்டு இடரும்

மலர்கள்

பாதுகாப்பாய் வைத்திருந்த

முள்களையே நேசிக்கின்றன


                                        - இராதே

இமைகள்

 இமைகள்


விழிகளை நொடியில் காக்கும் ;

   விழும்பொருள் தடுத்து நிற்கும் ;

எழிலுறு முகமாய்க் காட்ட

   இயல்புடன் அழகுக் கூட்டும் ;

வழிகிற கண்ணின் நீரை

   வழித்திட உடனே மூடும் ;

பொழில்தரும் பூக்கள் போல

    புலர்ந்திடும் இமைகள் தாமே !


இளமையின் ஆவ லாலே

   இரப்பைகள் துடிக்கும் மெல்ல

வளமிகு சிமிட்டல் கண்டு

    வளருமே வளமை காதல்

அளவிடும் பணியின் இன்பம்

   அழகுற பதிக்க வைத்து

களவிட மனத்தைத் தூண்டி

   கமுக்கமாய் ஏவல் செய்யும் !


                  -  இராதே


திங்கள், 30 டிசம்பர், 2024

அருமறை காதல்

 அருமறை காதல் !


(எழுசீர் : 

விளம் - மா - விளம் - மா

விளம் - விளம் - மா)


கருவிழி வண்டு 'கதகளி' ஆடிக்

   கண்ணிமைத் திரையினைத் தூக்க 

இருவிழித் துழாவி இருகிய உள்ளம்

   இளகிய நுங்கென மாற

ஒருவழி மோதல் ஒருவழி காதல்

   ஊஞ்சலில் ஆடிடும்  பெண்ணே !

தெருவழி நடந்து நின்முகங் காண

    தேய்ந்தன தேய்ந்தன கால்கள் !


திருகியத் தேங்காய்த் துருவலின் பூவாய்த்

   தெரிந்திடும் பற்களின் வெண்மை

உருகிய நெய்யின் ஒளிர்விடும் பாங்கை

   உடுத்திய மேனியின் வண்ணம்

பருகிடத் தூண்டும் பனிமலர் செவ்வாய்

   பரவிடுந் தேனிதழ் ஊற்று

நெருங்கிடத் தீண்டும் நினைவுகள் என்னில்

   நிகழ்ந்தன நிகழ்ந்தன கண்ணே !


சருகென நெஞ்சம் சலசலப் போடு

   சலங்கையின் ஒலியினில் துள்ளும்

மெருகுறு மஞ்சள் மேவிய கன்னம்

   மென்மையின் மேன்மையைச் சொல்லும்

அருகினில் அழைத்தே ஆசையைச் சுவைத்தே

    அணைத்திடும் முத்தங்கள் அள்ளும்

அருமறை ஓதும் அழகியல் காதல்

    அலைபடும் மஞ்சத்தை வெல்லும் !


                 - இராதே


கஜல் - 8

 கஜல் - 8


நான்பூந் தென்றல் ! கதவுகள் ஏனோ அடைக்கிறாய் ?

நான்குளிர் வாடை ! கம்பளிக்குள் ஏன் நுழைகிறாய் ?


நான்விழி வெண்படலம் ! கண்களை ஏனோ மூடுகிறாய் ?

நான்குருதிப் புனல் ! சினத்தில் ஏன்தான் முறைக்கிறாய் ?


நான்உன் உள்ளே ! வெளியே துரத்த முடியாது !

நான்உயிர்த் துடிப்பு ! மூச்சை நிறுத்த முடியாது !


நான்உன் உணர்வு ! நினைவைத் துறக்க முடியாது !

நான்உன் உலகம் ! காதல் நெகிழ்வுகள் மடியாது !


                  - இராதே

கஜல் - 7

 கஜல் - 7


'துறுதுறு' கண்களால் துழாவி நிற்பாயே !

துடிக்கும் நெஞ்சை மிரட்டவா ? உருட்டவா ?


'விறுவிறு' பார்வையை விலக்கி வைப்பாயே !

விஞ்சிடுங் காதலை மறைக்கவா ? மறக்கவா ?


கனவுகள் உண்ணும் கண்களில் வாளேன் ?

காதல் உணர்வை நறுக்கவா ? திறக்கவா ?


நினைவுகள் தூண்டும் நீண்டிடும் நாளேன் ?

நின்னுணர் ஏந்த மறுக்கவா ? சுமக்கவா ?


               - இராதே

தண்ணீர்த் தவம் !

    தண்ணீர்த் தவம் !


             



              எடுப்பு


கண்ணே கதை கேளு !

   கண்மணியே கதை கேளு !

பொன்னே கதை கேளு !

    பூமணியே கதை கேளு !       

  ( கண்ணே )


             தொடுப்பு


தண்ணீர் வந்த கதை !

   தாகந்தான் தீர்ந்த கதை !

கண்ணீர் நிறைந்த கதை !

   காலங்கள் நனைக்கும் கதை !          

( கண்ணே )


                 முடிப்பு


ஆயி அழுத கண்ணீர்

   ஆறாகப் பெருகி வந்தே

   ஆளும் நகர்நனைத்த 

   அன்புநீர் வார்த்த  கதை !      

தாயி உதிர்த்த செந்நீர்

   தானாகப் பெருகி வந்தே

   தவிக்கும் வாய்க்க ளித்த

   தாயன்பு சுரந்த கதை !    

( கண்ணே )


பொறிஞர் " லாம ரெசின் "

   பொறுப்பானப் பெருந் தவத்தால்

    பொங்கும் பூம்பு னலாய்ப்

     புதுவைக்கு வந்த தண்ணீர் !   

அறிஞர் அவர்தொ டுத்த

    ஆற்றல் மிகுசூ ளுரையால்

     ஆறாய்ப் பாய்ந்து வந்த

     ஆரமுத நீரின் கதை !   

( கண்ணே )

                            -  இராதே

இரவச்சம்

 இரவச்சம்


உள்ளவற்றை மறைக்கின்ற நோக்கம் இன்றி

   உதவிடவே இருக்கின்றார் செல்வர் என்றே

பள்ளத்தில் பாய்கின்ற நீரைப் போலே

  பரிவுடனே கையேந்தி கேட்டல் தீதே !

வெல்லத்தை நாடுகின்ற எறும்பைப் போன்றே

   வேண்டிவேண்டி இரப்பதுவும் நன்றும் அன்றே;

செல்வங்கள் இல்லாத நிலையில் கூட

   சென்றெங்கும் இரவாமை சிறப்பின் மேன்மை !


கையேந்திப் பிச்சையினைக் கேட்போர் காணின்

   கண்துளிர்க்கும் கல்மனமும் கரையுந் தேம்பும்;

பொய்யேந்தி மறைக்கின்ற பொல்லாச் செல்வர்

  பொருளனைத்தும் பயனின்றிப் பாழாய்ப் போகும்;

நொய்யரசி கஞ்சியதே உணவா னாலம்

    நுகர்கின்ற உழைப்பாலே கிடைத்தால் இன்பம் ;

பொய்ப்பேசி ஊரெல்லாம் இருகை நீட்டிப்

   புகழ்ப்பிச்சை எடுப்பதுவே வாழ்வின் துன்பம் !


இழிநிலையே நேரிடினும் இரக்கம் இல்லார்

   இல்லத்தில் பிச்சையினைக் கேட்க வேண்டாம் ;

பொழிகின்ற செல்வங்கள் மறைக்குந் தீய

   பொல்லாதார் பொருள்கேட்டே அலைய வேண்டாம் ;

பழிமிரட்டும் தீச்செயல்கள் தீர நாளும்

   பல்லிளித்து பிச்சைதனை எடுத்தல் என்றே

மொழிகின்ற மூடத்தன முட்டாள் கூற்றால்

   முடங்கிடுமே மானமுமே பிச்சை கேட்டால் ?

கட்டை விரலி

 "கட்டை விரலி"

(கதை பாடல்)


அன்னை ஒருத்தி வாழ்ந்தனள்

   அழகு குழந்தை வேண்டியே ;

முன்னை இயற்கை கடவுளை

  முனைந்து மூழ்கி வேண்டினள் ;

பின்னை அவளின் வேண்டுதல்

   பிள்ளை யாக தோன்றியே

வண்ண மலரின் இதழிலே

   வடிவில் குறைந்து தவழ்ந்தது !      (1)


கட்டை விரலின் அளவிலே

   கண்டெ டுத்த மகவினைக்

'கட்டை விரலி' எனப்பெயர்

    களிப்பில் உவந்து சூட்டினள்;

சொட்டுத் தேனின் பூவிலே

   துவளுங் குழவித் தூங்கிடக்

கொட்டைப் பாக்குத் தோலிலே

   குலுங்குந் தூளி செய்தனள்  !   (2)


வெட்டுக் கிளிகள் எறும்புடன்

    விரையும் பட்டாம் பூச்சிகள்

கட்டை விரலி நண்பராய்க்

    கனிவு பொங்கக் கூடின ;

தோட்டம்  முழுதுஞ் சுற்றியே

  சோர்வி லாமல் நாளுமே

கொட்டம் அடித்து பாடியே

    கூடி  ஆடி மகிழ்ந்தன ! (3)


ஆடுங் கட்டை விரலியை

   அழுக்குத் தவளை பார்த்தது

ஓடும் வழியை மறித்தவள்

    ஒளிரும் எழிலில் கிளர்ந்தது;

கேடு கெட்ட எண்ணத்தில்

   கிறங்கி தவளை விரலியைப்

பாடும் வாயால் கவ்வியே

    பாய்ந்து நீரில் மறைந்தது !  (4)


வாடி எந்தன் செல்லமே

    வருக எந்தன் இல்லமே

தேடி வந்தேன் மருமகள்

    தேவன் எந்தன் மகனுக்குக்

கூடி உன்னை மணஞ்செய

     கொண்டு வந்தேன்

நானடி

ஆடிப் பாடிக் கனவிலே

    அழுக்குத்  தவளை மிதந்தது !  (5)


தேடி வருவேன் மகனோடு

    தேவி நீயுந் தாமரை

ஊடி வளரும் இலையிலே

    ஒளிந்து நிற்பாய் வருகிறேன் ;

பேடி தவளை மறைந்தது

   பேதை விரலி அழுதனள் ;

வாடி நின்ற விரலியை

    வண்ண மீன்கள் சூழ்ந்தன ! (6)


அழுகை வேண்டாம் விரலியே

அன்பாய் மீன்கள் உதவுவோம் ;

முழுகுங் கமலத் தண்டினை

   முந்தி மீன்கள் கடித்தன

வழுக்கி வீழ்ந்த தண்டிலை

    வாகாய் ஓட மாக்கியே

முழுதுஞ் சுமந்து விரலியை

    முடிவாய்க் கரையில் சேர்த்தன ! (7)


கறக்கும் மடியை முட்டிடும்

    கன்று போல விரலியை

பறக்கும் பட்டாம் பூச்சிகள்

   படையெ டுத்து சூழ்ந்தன ;

மறந்தி டாமல் விரலிக்கு

   மனது வைத்து உதவின;

சிறந்த நட்பின் சின்னமாய்ச்

    சிறகை அடித்து மகிழ்ந்தன ! (8)


பட்டாம் பூச்சி தகவலால்

   பறந்து வந்த சிள்வண்டு

விட்டி டாமல் விரலியை

    விரைந்து சென்று மீட்டது ;

கட்டித் தழுவி விரலியோ

   கண்ணீர் மல்க நன்றியை

ஒட்டு மொத்த மாகவே

     உதவி னோர்க்கே ஈந்தனள் !


                       -  இராதே


ஞாயிறு, 29 டிசம்பர், 2024

மறைமலை அடிகள்

 ஆனந்த களிப்பு


மறைமலை அடிகள்


மறைமலை அடிகளார் என்றே - தமிழில்

   மாற்றிய தன்பெயர் வைத்தாரே நன்றே !

துறைபல அறிவுகள் வென்றே - மொழி

   துளிர்த்திட உழைப்பினை ஈந்தாரே அன்றே !


சொற்றமிழ் கலப்புகள் கொன்றார் - தூய

   சொற்படுந் தனித்தமிழ் வழியினில் சென்றார் !

நற்றமிழ் காத்திட நின்றார் - நாளும்

   நற்பயன் மேவிடும் செம்மொழி கண்டார் !


சிவனியம் தமிழுமே மூச்சு - அதை

   சிறப்புற செயல்பட தொடர்ந்தார்நல் பேச்சு

கவணுறு தனித்தமிழ் வீச்சு - எங்கும்

   கவின்மிகு செந்தமிழ் வீற்றிடுங்கோ லேச்சு !


நனிமொழி எதிர்ப்போரின் சந்தை - வீழ

   நயம்பட போரிட்ட ஆர்த்தெழு எந்தை !

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - இவர்

   தாய்மொழி செழித்திட செய்தாரே விந்தை !


                                   - இராதே


தொடர்வண்டி

 தொடர்வண்டி


'தடதட'  'கடகட' தொடர்வண்டி

   தாளங்கள் போட்டிடும் தொடர்வண்டி ;

அடர்நிலை காடுகள் உள்நுழைந்தே

   அழகிய இயற்கையின் முகங்காட்டும் ;

வடம்பிடிக் கயிறென உடல்நீண்டு

   வளைவொடும் நெளிவொடும் பயணமிடும் ;

'மடமட' மடவென மைல்கடக்கும்

   மனம்போல விரைந்திடும் தொடர்வண்டி !


மலைமேலே முகடுகள் ஊர்ந்தேறும்

   மடுவுகள் அடைந்திட வழிந்தூரும்

அலைபடக் காற்றினைக் கிழித்தேகி

   அடைந்திடும் இலக்கினைத் தொடர்வண்டி ;

உலைபட்ட இரும்புத்தண் டவாளத்தில்

   உறுதியாய் இயங்கிடுந் தொடர்வண்டி ;

நிலையங்கள்  நேரத்தில் சென்றடையும்

   நின்றுபின் பயணத்தைத் தொடர்ந்துவிடும் !


              -   இராதே

                  27.12.2016


சொற்கேட்டல் இன்பம்

 சொற்கேட்டல் இன்பம் !


படுக்கையில் கால்கை  ஆட்டிப்

   படிகளில் தவழ்ந்தே யேறித்

தடுக்கியே விழுந்து வாரித்

   தத்தியே நடக்கக் கற்று

அடுப்படி நுழைந்து சுற்றி

    ஆக்கிய சோற்றைக் கொட்டிக்

கொடுக்குகள் அடிக்கும் கொட்டம்

   குளிருதாம் மனத்துள் இன்பம் !


அடுக்கிய உடைகள் பொம்மை

   அனைத்தையும் அள்ளி வீசி

இடுக்கிலே புகுந்து வந்தே

    எட்டியே குறும்பாய்ப் பார்த்துத்

துடுக்காக ஓடி யாடித்

   துள்ளியே துள்ள லோடே

சொடுக்கிடும் நொடிக்குள் ளாக

   சுழன்றாடும் மழலை இன்பம் !


சுண்ணாம்புச் சுவற்றி லெல்லாம்

   சுரண்டியே கிறுக்கி வைத்துக்

கண்ணாடிக் கதவைத் தட்டிக்

   கற்கண்டாய்ச் சிதற விட்டுப்

பின்னாடி ஒளிந்து நின்று

   பிறைபோலே எட்டிப் பார்த்து

முன்னாடிக் குழையும் பிஞ்சின்

   முகத்தாடல் கொள்ளை இன்பம் !


அன்னைமுந் தானைப் பற்றி

   அடிக்கடி காலைச் சுற்றிக்

கண்ணாக வளர்க்குந் தந்தை

   கைகளில் பிடித்துத் தொங்கி

வண்ணமாய்க் கொஞ்சிக் குலாவி

   வாயாற முத்த மிட்டே 

எண்ணத்தை ஆளும் செல்வ

   இளம்மழலைச் சொற்கள் இன்பம் !


தன்மக்கள் தீண்டல் இன்பம்

   தரத்தாலே உயர்ந்த தென்பார்;

வெண்சங்கும் குழலும் யாழும்

   வெற்றிசைதான் மழலை முன்னே ;

இன்சொல்லாய் அவர்தம் சொற்கள் 

   இசைக்கின்ற சொற்கள் தானே ;

இன்பமுறு மக்கள் பேறே

   இனிதான தென்பான் ஐயன் !


இன்னிசையில் உலகம் சொக்க

   இயம்புகிற சொற்கள் யாவும்

மண்ணசைக்கும் மழலை  முன்னர்

   மண்டியிடும் சொற்கள் தாமே;

விண்ணுயர நின்ற ஐயன்

விருப்புடன் மக்கள் பேற்றின்

மாண்புகளைச் செவிக்குள் ஈந்தே

   மகத்தான குறள்தந் தானே !

                            - இராதே


இமயம்

 அன்னை தெரெசா பிள்ளைத்


தமிழ்


காப்புப் பருவம்


'இமயம்'


(32  சீர் விருத்தம்)


பரிதி விரிகதி ரொளிர மலையுறு

   படல உறைபனி வெள்ளொளி விட்டெழும்;

பரவி உருகிட நழுவு நனிபனி

   பருவ நடையினை யிட்டெழ மெட்டிடும்;

பசுமை வரையினை அணியுந் துகிலெனும்

   பனியின் புகைபட ஒட்டறை நெட்டிடும் ;

படிக எதிரொளி யிடற மழைதரு

   படித லமைவுற முட்டிடுங் கொட்டிடம் !


அரிது மலைவிழு மருவி தருமொரு

   அரிய இசையெழ மத்தள மிட்டிடும் ;

அரவு வளைவென ஒடிய நடமிட

   அலையும் வழிகளுங் கிட்டிடும் , கிட்டிடும் ;

அகிலின் மணமெழ அமல அசைவினை

   அருளு மலையுடை வட்டிகை ஒத்திகை ;

அடநம் பெருகிடும் அமர ருலகினை

   அடவி விரவிட நெட்டிடை முட்டிடும் !


பெரிய மடலிதழ் அவிழ  மலரினம்

   பெருக நறுமணம் புக்கிடம் சொக்கிடும் ;

பிடகை மரமிகு நிறைவு மெருகிடும்

   பெருகு மலைவளம் செப்பிடும் அப்பிடும் ;

பெடையின் துணையொடு பரவும் சிறகினம் 

   பிணைவு மகிழுற முத்திடும் கத்திடும் ;

பிளிறு களிறுடன் பிடியு முலவிடும் 

   பெருமை இமமலை நல்லழ கெட்டிடும் !


உரிய உதவிக ளுதவும் குணமக

   ளுருகு வறியவ ருற்றது விட்டிட

உலகு முழுவது மிளிர உலவிடு

   முதய நிலவொளி வட்டெழு வித்தகி

உயர நிலையுடை ஒழுகு பணிவினை

   உணரு மதியுடை நல்லவ ளுள்ளுய

ருறவு மலருறு மிமய மலைமக

   ளொளிர அருளுக நற்றுணை யெட்டவே !


                                        -  இராதே

தேனீர்

 தேநீர்


புல்வெளியின் நடுவத்தில்
போடப்பட்டிருந்த மேசையின் மேல்
கண்ணாடிக் கோப்பை

முக்கால் வாசி வெந்நீர்
கால் வாசி காற்று
கரைந்துகொண்டிருந்த
துகள்பையின்  மணம் பரவுகிறது

செய்தித் தாளை விடுத்து
பார்வையைத் தாழ்த்துகிறேன்
ஆவிபறக்கும் தேநீர்

மிடறு மிடறாய் இறங்குகிறது
சுடச்சுடச் செய்திகள்

இதமான மிடறுகளில்
இடையிடையே சிக்கிக் கொள்கின்றன
நிகழ்கால அவசரங்கள்

காய்கறிகாரியின் குரலுக்கு
சென்று திரும்பும் பார்வை

கடைசி மிடறுக்குப்பின்
கோப்பையை நிறைத்து விடுகிறது
காற்று

மற்றொரு முறை
 தாழ்கிறது பார்வை
தேநீர் தேடி

                       - இராதே

அலைகள்

 அலைகள்


பிறைநிலா சிரிப்பில்
அமைதிப் பட்டுக்கிடக்கிறது
பெருங்கடல்

சலனமற்ற இரவில்
காற்று பேசிக்கொண்டிருக்கிறது

ஒரு புறம்
ஓய்ந்திருக்கும் படகுகளும்
சிதறித் தெறித்த சோழிகளும்
மௌனம் சாதிக்கின்றன

மற்றொரு புறம்
தூரத்தில் நின்றபடி
விட்டுவிட்டு ஒளி உமிழும்
கலங்கரை விளக்கம்

பனி பொழியும்
நெடும் மணல் பரப்பு
விடுத்து மீள்கிறேன்
கால்பற்றி இழுக்கும்
அலைகள்

                 - இராதே

எழுத்து

 எழுத்து


பனி படர்ந்த
சன்னல் கண்ணாடியில்
விரல் தொட்டு எழுதுகிறேன்
தரை இறங்குகின்றன துளிகளாய்

மேசை பரப்பில்
படிந்திருந்த தூசி்ல் எழுதுகிறேன்
பறந்து விடுகின்றன துகள்களாய்

கடற்கரை மணலில்
எழுதினேன் மறைகின்றன அலைகளால்

கண்ணீரில் எழுதியவைகளைப்
பிய்த்து எறிகிறேன்
 பதிந்துவிடுகின்றன இதயத்தில்
 வடுக்களாய்

              - இராதே

துயில்

 துயில்


இரவை அள்ளுகிறேன்
கைக்குள் மிதக்கின்றன
விண்மீன்கள்
நிலவும் நீந்துகிறது

கையுதற
கார்முகிற் காரிருளில்
மறைகிறேன்

கிழித்துகொண்டு நெளிகிறது
வெளிச்ச கீற்று

சடசடக்கும் சறுகுகளின் மேல்
தூறல்

துல்லியமாய் ஒலிக்கிறது
தூரத்து இடி முழக்கம்

நட்டநடு நிசியில்
யார் யாரோ தூங்குகிறார்கள் ?
தவிப்பில்
மனம் உரசும் துயரத்துடன்
பேச்சு வார்த்தை

புலரியில் 
மழை ஓய்ந்திருந்தது
தொடுவானம் வெளுக்கிறது

மெல்ல 
தூக்கத்தின் பிடியில்
கண்கள் அகப்படுகின்றன

விடிந்த போதும்
விடியாத துயரங்களுடன்
துயில்கிறேன்

             -   இராதே

சுவடு

 சுவடு


விடியலில் விழித்தெழுந்த
வைகறை புள்களின் கொஞ்சல்கள்
செவியேறும் பொழுது
உவகை பேரூற்றில்
உள்ளம் நனைகிறேன்

சிரிப்பை வாரிஇறைத்து
இன்றைய விடியலை வழியனுப்பும்
கொத்து மலர்களின் நீட்டங்கள்

ஒவ்வொரு புல்லும்
மகுடம் சூடிய மயக்கத்தில்
சாய்ந்து கிடக்கின்றன

பனி பருக
விழைகிறது கதிரவனின்
ஒளிக் கற்றை

மனத்தைத் துன்புறுத்தும்
கவலைகளை அனுமதிக்காத
இளங்காலை வேளை
தனித்த நடையில்
மகிழ்வை உணர்கிறேன்

இந்த நாளும் இனிதே
இரட்டிக்கும் நடையின் வேகம்

தடம் பதிக்கும்
காலடிச் சுவடுகளில்
புலப்படுகிறது நம்பிக்கையின்
ஆழம்

                   - இராதே


இலையுதிர்க் காலம்

 இலையுதிர் காலம்


இலைகள் அகல
மனமில்லா விட்டாலும்
பட்ட மரங்களாய்க்
காட்சிப்பட்டன
மொட்டையடிக்கப்பட்ட
பசுமரங்கள்

ஒவ்வொரு உதிரலிலும்
பிரிதலில் புலம்பி 
சறுகுகள் விரிக்கும்
பாட்டைகளில்
ஓடி வந்து
மரங்களைக் கட்டிப்பிடித்து
அழுகின்றது
முதுமை

சறுகுகளுக்கு இது
இனப்பெருக்கக் காலம்

 கூட்டிப் பெருக்கிப்
புதைப்பதில் உரம்
சேர்த்து கொளுத்தி எரிப்பதில்
சாம்பல்

வசந்த கால நினைவுகளை
அசைபோடும் முதுமையின் முன்
இரண்டு வினாக்கள்
உரமா ? சாம்பலா ?

சிந்திக்கும் வேளையில்
மீண்டும் வருவேன்
சொல்லாமல் சொல்லிற்று
இலையுதிர் காலம்
                     - இராதே

களிமண்

 களிமண்


பக்குவமாய்
மெறிப்பட மிதிப்பட
மென்மையாக் குழைகிறது
களிமண் மனது

பிசைந்த உருண்டைகள்
அப்பிய வாழ்க்கை
சக்கரம் சுழல
வனைந்த எண்ணங்கள்
உருவங்களாய்
முளைவிடுகின்றன

பட்டறிவு சூளைக்குள்
வெந்து உறுதிபடும்
தோண்டிகள்
உடைபடும்
பனிக்குடத்தில்
உயிர்க்கும் பிறவிகள்

மரித்தலில்
உடையும் பானைகள்
தட்டித் தரம் பார்க்க
ஓசையில் ஒலிர்கிறது
மனித தலைகளில்
களிமண்

                 - இராதே


பனித் துளி

 பனித் துளி


பனித் திவலைகள்
மலர் படுகின்றன
அடுக்குகளின்
இடுக்குகளில்
இதழிறங்குகின்றன

மலர்களில்
தணிக்கை செய்யும்
தும்பியின் கால்களில்
இடர்படும்
பனி மொக்குகள்

உருளும்
துளிகளில்
சுழலும் உலகம்

ஒன்றை ஒன்று
அரவணைப்பதில்
மரணித்து விடுகின்றன

நெஞ்சம் நனைத்த
பனித் துளிகள்
சுகமானவை

கண் பனித்தலில்
ஒவ்வொரு துளியிலும்
இன்பம்

                 - இராதே

ஓவியம்

 ஓவியம்


பசும் வயலில்
நிழல் பூசி செல்கின்றன
கருமுகிற் கூட்டங்கள்
ஏதிலியாய் வாடுகிறது
வெண்கொக்கு

குளிர்த் தென்றல்
உடல் மேவ
கணுக்காலில் 
நீர் மோத

நகராமல்
கூர்த்த அலகில்
குறி வைத்தபடி

நிழல் கடந்தும்
மேனி அசையா
தனித்த தவம்

தூரத்து தூரிகையால்
என் கண்ணுக்குள்
தீட்டப்படுகின்றன
தனிமை ஓவியம்

                       - இராதே

வடிவியல்

 வடிவியல்


பனி உலர்த்தி
புல் ஒளிரும்
இளங்காலை பொழுதில்
விடைபெறுகிறது
வெள்ளி நிலா

மௌனம் மொழியும்
தனித்த நடைதொடர
சாலை மருங்கில்
மெல்ல மெல்ல
மேயும் என் கண்கள்

மென் காற்றின்
புன்முறுவலால்
கிளைவிடுத்து தரைபடரும்
மலர் சொரிதலில்

அடர் மஞ்சள்
சுடர் சிவப்பில்
மலர் வட்டங்கள்

எப்படி
வடிவியல் தெரிகிறது
நடுநின்ற
கொன்றை மரங்களுக்கு
வியப்பில் விடிகிறது
காலை

               - இராதே


வசந்தம்

 வசந்தம்


மெதுவாய் தடம்பதித்து
படிகளில் இறங்குகிறேன்
நீண்டுபோய் நிறுத்துகிறது
வறட்சி வரைந்த கோலங்களில்

காணக் கிடைக்கின்றன
கெட்டியும் ஆம்பலும்
எச்சங்களாய்
அறுநீர்ப் பறவைகளின்
நடமாட்டமில்லை
இடம்பெயர்ந்து விட்டன
தவளை சத்தங்கள்

மூலையில்
காய்ந்த முட்புதரில்
எட்டித் தலையாட்டும்
வயிறொட்டிய ஓணான்

வெயில் நாக்கு தீண்டியதில்
தீண்டாமையால் தவிக்கிறது
கேட்பாரற்றுக் குளம்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்த்
தூறல்
மண்ணின் மணம்
 பரவுகிறது
மெல்ல செவியடைகிறது
தூரத்து இடி முழக்கம்

நம்பிக்கையில் படியேறுகிறேன்
மறுபடியும்
தாமரை இலைகளில்
பாதரசத் துண்டங்களாய்
நீர்த் திவலைகள்
உருளும்
வசந்தம் திரும்பும்

                    _ இராதே

அருவி

 அருவி


என்றென்றும் என் ஆசை
விழும்போதெல்லாம் மலையிறங்கும்
அருவியாக இருக்க

துள்ளல் , களியாட்டம்
உவகை
மீந்திருப்பவை என்னிடம்

வியப்புகளை அன்னாந்து
பார்க்கிறபோது
கால்தட்டுப்படுபவை
நான் கடந்து செல்லும்
இவைகள் தாம்

ஒருவேளை
காய்ந்துபோனாலும் கூட
என்னோடு ஒட்டியிருக்கும்
எச்சங்கள் இவைகளே

தெளிக்கும் ஒவ்வொரு 
துளியிலும்
வீசும் சிலுசிலு சாரலிலும்
மனத்துள் நிறைவினை
வரையறுத்து கொள்கிறேன்

அருவிகள் முற்றிலும்
மரணித்து விடுவதில்லை
மனங்களைப் போல
மறுமுறை மறுமுறை
எழும்
               - இராதே

தூரம்

 தூரம்


வாய்க்கால் வரப்புகளில்
எவ்வளவு தூரம்
நடந்திருப்பேன்
எண்ணாமல் கழிகிறது
பொழுது

வெண்நுரை முன்னுரையில்
 நீர்ப் பாயும்
உரசலில் நெளிந்து 
கிடக்கிறது வாய்க்கால்

கரையாடி வலைபுகும்
நண்டுகள்
தலைமுங்கி நீர்ச் சிலுப்பும்
காகங்கள்

ஆங்காங்கே
தலைநீட்டிச் சிரிக்கும்
ஒற்றைப் பூக்கள்

புல்பரப்பில் 
வெண்கோடு தீட்டும்
நத்தை

பசும்புல்லின் நுனிஆடும்
வெட்டுக்கிளி
நா நீட்டி ஏமாறும் 
ஒணான்

கிளை இடுக்கின் உள்வழிந்து
இளம்மஞ்சள் பூசும்
மாலை வெயில்

தூரம் அதிகமில்லை
தொடரலாம்
மனது

              - இராதே

நிலா மயக்கம்

 நிலா மயக்கம்


கரையோர புதர்களில்
ஒளி துளிர்க்கும்
மின்மினிகளால்
கசங்கும் இரவில்

மஞ்சு இடை நுழைந்து
மின்னல் கொடி பற்றி
மகிழம்பூ நீர்விரிப்பில்
சறுக்கி விழுந்த 
நிலா

வெகு இயல்பாய்த்
தத்திச் சென்று
நிலவை உடைத்த
சில்லு

கடக்கும் இடைவெளியில்
ஒவ்வொரு முத்தத்திலும்
வளையங்களை
உயிர்ப்பித்து
சிற்றலைகளைத் துரத்தி
கரையேறுகிறது

உடைந்த துண்டங்கள்
ஒன்றாக முழுநிலவின்
ஒளி பருகி மயக்கத்தில் 
உறங்கிற்று
குளம்

          - இராதே


படித்துறை

 படித்துறை


தெப்பக் குளத்து
படித்துறையில்
மடிந்து மடிந்து
நிழலமர
நனையும் கால்களைச்
சுத்தப்படுத்தும்
மீன்கள்

சிறுகல் எறிதலில்
விலகி அசையும்
வளையங்களில்
நெளிந்து நெளிந்து
நிமிரும்
ஆழிமண்டப 
பிம்பம்

மஞ்சள் குழைக்கும்
மாலை வெயில் வழிய
முங்கி கரையேறும்
பூவையரின் ஈரத்
துணியினூடே
சொட்டிச் சொட்டிப்
படிகளில் வழிகிறது
காமம்
வழுக்குகிறது
மனசு

துள்ளும் மீன்கள்
பொறியடித்து மூழ்க
கோபுர மாடத்தில்
பட படத்து வானேகும்
மணிபுறா

நாலாம் கால 
மணியோசை
நிகழ் உலகிற்கு
இழுத்துவர
தென்றலுடன்
பயணிக்கிறேன்
இல்லந்தேடி

                -  இராதே

கதவு

 கதவு


யார் யாரோ தட்டுகிறார்கள்
தீண்டாமை பார்ப்பதில்லை
யார் என்று கேட்பதில்லை
அமைதி சாதிக்கிறது
கதவு

எங்கே திறந்திடுவோமோ ?
அச்சத்தில்
இரட்டை தாழ்ப்பாள்
இட்டுக்கொள்கிறது
தமிழ் கதவு

காற்றின் போக்குவரவை
அடித்து பறைசாற்றும்
சன்னல் கதவு

சிறார்களின்
ஊஞ்சலாகிவிடுகிறது
வாயற் கதவு

பூவையரின்
பாதி முகங்காட்டித்
திறந்திடுமின்
கண்ணாரக் காண
மென்கதவு

சில நேரம்
பழுதடைந்ததை
கீச்சுக் குரலால்
காட்டிக் கொடுக்கும்
பழங்கதவு

கதவுகள் எப்போதும்
கதவுகள் தாம்
தாழ்ப்போடும்
தாழ்த்திறக்கும்

திறவாமல்
பூட்டியே கிடக்கின்றன
மனக் கதவுகள்

திறந்திடு சீசே !

                        - இராதே

தம்புரா

 தம்புரா


விரல் நழுவ விரல் நழுவ
அலையெழும்பி அலையெழும்பி
இதம்பிரித்து அகம்நெகிழ
வெண்புறவின்
மடியமர்ந்து
தலைசாய்த்து
விடியும் பனிப்பொழுதைப்
புதுக்கியபடி
நயம்மீட்டும்
மெல்லிசையின்
லயம் கமழ கணம் கவர
மீளா நினைவுசுழல்
ததும்பியெழ
பாய்கிறது அமைதிநதி
நனைந்த மனம்
பனித்தவிழி
புன்சிரிப்பில்
தம்புரா

              - இராதே

கொலுசு

 கொலுசு


அறைக்குள்
தந்தியறுந்த
வீணையைத் தழுவியபடி 
நிலைத்தேன்

சன்னலினூடே
கொஞ்சிக் கொண்டே
முந்தியது கொலுசு
சத்தம்

நடைக்கேற்ற ஒலிப்பா ?
இசைக்கேற்ற நடையா ?
புரிதலுக்குள்
தாளம் தப்பும் 
மனது

கொலுசுகள் எப்போதும்
கொலுசுகள் தாம்
நடைகள் எப்போதும்
நடைகள் தாம்

பிசகும் சிந்தைக்குள்
பிசகாத இராகங்கள்
மீட்டுகிறது
சலங்கை ஒலி

                    - இராதே

அமைதி

 அமைதி


ஆளரவமற்ற இடத்தில்
இரைச்சல் முழவிடும்
பேரருவி

அறுத்தோடும் வழிநெடுக
சலசலக்கும்
ஓடை

தொட்டுத் தொட்டுப்
பூவசைக்கும் 
வண்டுகளின் ரீங்கார
தொனி

காலடி பதிவுகளுக்கு
இசை கோர்க்கும்
சறுகு

தொடர் கொத்துக்களில்
துளையிட்டு ஒலிபரப்பும்
மரங்கொத்தி

மூங்கில் ஓட்டைகளில்
தழுவித் தழுவி
இசைமுனுகும்
காற்று

யாருமற்ற தனிமையை
உறுதிப்படுத்தும்
'அக்கக்கோ' குருவியின்
கூக்குரல்

இப்படி 
எல்லா ஒலிகளாலும்
புணரப்படுகிறது
ஒரு காட்டின்
அமைதி

                 - இராதே

பொழுது

 பொழுது


அந்தி வானசிவப்பும்
அடுத்தெழும் அடர்கறுப்பும்
பிணைந்து நெய்த
கம்பள விரிப்பில்
துயில்நடை இடும்
இரவின் நீட்சி

மெல்ல மெல்ல அல்லாடும்
நினைவுத் தோணி
கரைசேர துடுப்பின்றி
அலக்கழிக்கும்
 காலம்

கொள்ளாக் கோணிப்பையில்
திமிற திமிற துறுத்தப்படுகிறது
தனிமை
பிதுங்கி வழிந்தோடும்
கவலைகள்
இறுக்கப் பிடித்து கட்டிய
கோணியின் வாயில் 
சிக்கிய தனிமை
அவிழ்த்து விடு என
கெஞ்சிய ஏக்கப்பார்வையைக்
கடந்து போய்க்கொண்டே இருந்தது
பொல்லாப் பொழுது

                       - இராதே

நடை

 நடை


நீள் பயணத்தில்
வடம்பிடித்து அடம்பிடிக்கும்
மனத்தோடு
நடைபயிலும் கரையோரம்
தடம் பதிக்கும் கால்கள்

திரும்பிப் பார்க்கையில்
சுவடுகள் கலைக்கும்
அலைகள்
பயணத்தை நீட்டும்
மன அலைகள்

போகிறபோக்கில்
விட்டுச் செல்லும்
சிப்பிகளும் சங்குகளும்
சுமை இறக்கிய மகிழ்வில்
கரைநழுவும் அலைகள்

விடாது சுமக்கும்
நினைவலையோடு
நடை தொடரும்
மனது

எங்கே பயணம் ? எங்கே முடிவு ?
புலர்தலில் அவிழ்கிறது
புதிர் .

            - இராதே

திருடும் கண்கள்

 திருடும் கண்கள்


அசைவற்ற குளம்
அசைந்து ஊர்ந்தன
வெண்பஞ்சு முகில்கள்

மரத்தில் நுழைந்து
கிளையை வருடும்
காற்றின் தழுவலில்
சிலிர்த்து உதிர்ந்து
சிறுபடகாய் நகரும்
சறுகு

ஓயாத குரலொலிக்கும்
தவளைகள் பாயாதா ?
எதிர்பார்ப்பில்
நீந்தி நீந்தி சலித்த
நீர்ப்பாம்பின் 
மௌனம்

ஒரே பாய்ச்சலில்
நிலவை உடைத்த
தவளை

ஒலித்த குரல்
கம்ம கம்ம
விழுங்கியபடி
குடிபுகிறது
நீர்ப்பாம்பு

மறுபடியும்
 மயான அமைதி
சலனமற்ற இரவைக்
கவ்வியபடி
காட்சியைத் திருடின
கண்கள்

                 - இராதே