அருமறை காதல் !
(எழுசீர் :
விளம் - மா - விளம் - மா
விளம் - விளம் - மா)
கருவிழி வண்டு 'கதகளி' ஆடிக்
கண்ணிமைத் திரையினைத் தூக்க
இருவிழித் துழாவி இருகிய உள்ளம்
இளகிய நுங்கென மாற
ஒருவழி மோதல் ஒருவழி காதல்
ஊஞ்சலில் ஆடிடும் பெண்ணே !
தெருவழி நடந்து நின்முகங் காண
தேய்ந்தன தேய்ந்தன கால்கள் !
திருகியத் தேங்காய்த் துருவலின் பூவாய்த்
தெரிந்திடும் பற்களின் வெண்மை
உருகிய நெய்யின் ஒளிர்விடும் பாங்கை
உடுத்திய மேனியின் வண்ணம்
பருகிடத் தூண்டும் பனிமலர் செவ்வாய்
பரவிடுந் தேனிதழ் ஊற்று
நெருங்கிடத் தீண்டும் நினைவுகள் என்னில்
நிகழ்ந்தன நிகழ்ந்தன கண்ணே !
சருகென நெஞ்சம் சலசலப் போடு
சலங்கையின் ஒலியினில் துள்ளும்
மெருகுறு மஞ்சள் மேவிய கன்னம்
மென்மையின் மேன்மையைச் சொல்லும்
அருகினில் அழைத்தே ஆசையைச் சுவைத்தே
அணைத்திடும் முத்தங்கள் அள்ளும்
அருமறை ஓதும் அழகியல் காதல்
அலைபடும் மஞ்சத்தை வெல்லும் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக