சிந்து
எடுப்பு
நல்ல விருந்திவ் விருந்து- நனி
நல்கிய தமிழர் தூய விருந்து ( நல்ல )
கண்ணிகள்
அன்புட னார்த்த விருந்து - நமை
ஆட்கொள செய்தே களிக்கும் விருந்து
இன்பங்கள் கூட்டும் விருந்து - உளம்
எண்ணி மகிழ ஏற்ற விருந்து ( நல்ல )
பண்புசெய் தமிழர் விருந்து - நாளும்
பரிவு கெடாமல் காக்கும் விருந்து
உண்ண உவக்கும் விருந்து - சுவை
ஊறிய தோழமை சொக்கும் விருந்து ( நல்ல )
சொந்தங்கள் கூடும் விருந்து - பல
துன்பங்கள் போக்கும் மேன்மை விருந்து
வந்தாரை வாழ்விக்கும் விருந்து - கள்ள
மறைவு திரையை நீக்கும் விருந்து ( நல்ல )
கேடுகள் கலைக்கும் விருந்து - உயர்
கேண்மையை வளர்க்கும் நுட்ப விருந்து
மேடுபள்ளங் காணா விருந்து - சமம்
மேவிடும் ஒற்றுமை பந்தி வி்ருந்து ( நல்ல )
தன்மானத் தமிழர் விருந்து - என்றும்
தமிழர் பெருமை போற்றும் விருந்து
வான்புகழ் ஓங்கும் விருந்து - தொல்
வண்டமிழ் வரலாற்றுச் சிறப்பு விருந்து ! ( நல்ல )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக