இலையுதிர் காலம்
இலைகள் அகல
மனமில்லா விட்டாலும்
பட்ட மரங்களாய்க்
காட்சிப்பட்டன
மொட்டையடிக்கப்பட்ட
பசுமரங்கள்
ஒவ்வொரு உதிரலிலும்
பிரிதலில் புலம்பி
சறுகுகள் விரிக்கும்
பாட்டைகளில்
ஓடி வந்து
மரங்களைக் கட்டிப்பிடித்து
அழுகின்றது
முதுமை
சறுகுகளுக்கு இது
இனப்பெருக்கக் காலம்
கூட்டிப் பெருக்கிப்
புதைப்பதில் உரம்
சேர்த்து கொளுத்தி எரிப்பதில்
சாம்பல்
வசந்த கால நினைவுகளை
அசைபோடும் முதுமையின் முன்
இரண்டு வினாக்கள்
உரமா ? சாம்பலா ?
சிந்திக்கும் வேளையில்
மீண்டும் வருவேன்
சொல்லாமல் சொல்லிற்று
இலையுதிர் காலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக