எடுப்பு
மனத்துள்ளே தாயென்றும்
உயிர் வாழ்கிறாள் ! - என்னை
மனதாற அவள்வாழ்த்தி
வாஞ்சை கொள்கிறாள் ! ( மன )
தொடுப்பு
மானத்தை அன்பாலூட்டும்
மாண்புக்காரி ! - பொய்க்கா
வானம்போல் நன்மையளித்திடும்
பண்புக்காரி ! ( மன )
முடிப்பு
வட்ட நிலவை வானில் காட்டி
ஊட்டி மகிழ்ந்தவள் ! - தேன்
சொட்டும் பாட்டால் தொட்டில் பற்றி
ஆட்டி நெகிழ்ந்தவள் ! ( மன )
தத்தித் தத்தி நடக்கும் போதே
சுற்றி வந்தவள் ! - உள்ளம்
தத்த ளித்தே வாடும் போதே
சார்ந்து நின்றவள் ! ( மன )
தட்டி நன்குப் பாடஞ் சொல்லித்
தகுதிச் சேர்த்தவள் ! - என்னை
விட்டுக் கொடுக்காமல் சண்டை
போட்டு வளர்த்தவள் ! ( மன )
வீட்டுக்குள் நுழையும் போதே
சுற்றிப் போடுவாள் ! - கண்
பட்டுப் போகுமென்றே நேயம்
பற்றுக் காட்டுவாள் ! ( மன )
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக