இராதே

இராதே
eradevadassou

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

தூரம்

 தூரம்


வாய்க்கால் வரப்புகளில்
எவ்வளவு தூரம்
நடந்திருப்பேன்
எண்ணாமல் கழிகிறது
பொழுது

வெண்நுரை முன்னுரையில்
 நீர்ப் பாயும்
உரசலில் நெளிந்து 
கிடக்கிறது வாய்க்கால்

கரையாடி வலைபுகும்
நண்டுகள்
தலைமுங்கி நீர்ச் சிலுப்பும்
காகங்கள்

ஆங்காங்கே
தலைநீட்டிச் சிரிக்கும்
ஒற்றைப் பூக்கள்

புல்பரப்பில் 
வெண்கோடு தீட்டும்
நத்தை

பசும்புல்லின் நுனிஆடும்
வெட்டுக்கிளி
நா நீட்டி ஏமாறும் 
ஒணான்

கிளை இடுக்கின் உள்வழிந்து
இளம்மஞ்சள் பூசும்
மாலை வெயில்

தூரம் அதிகமில்லை
தொடரலாம்
மனது

              - இராதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக