சென்றேன்நான் அலைதவழுங் கடலின் ஓரம் ;
சிந்துகின்ற நிலவொளியில் நனைந்தேன் ஈரம் ;
நின்றேன்நான் கடற்கரையில் சிறிது நேரம் ;
நினைவலைகள் எனையிழுத்தது காதா தூரம் ;
அன்றொருநாள் மணல்வீட்டை உடைத்த வீரம் ;
அழகான சிறுபிள்ளைத் தனத்தின் தீரம் ;
கன்றெனநான் அருந்தியபால் தமிழின் சாரம் ;
கனிதமிழாள் கைப்பிடித்தே இட்டாள் ஆரம் !
நண்டோட நான்துரத்த வலையில் செல்லும்
நண்டொளிந்தே ஆடுகிற ஆட்டம் வெல்லும்
கண்டோர்தாம் கைக்கொட்டி நகைப்பார் மெல்ல
கரையொதுங்கும் சங்கினிசை செவியில் சொல்ல
கொண்டாட்டம் மனத்தெழும்பும் உணர்வில் துள்ளும்
கோலமிகு நுரையெழிலுங் கொள்ளை கொள்ளும்
திண்டாடுந் திரைத்ததும்ப நெஞ்சம் விள்ளும்
திகைப்பான அருங்காட்சி மனத்தை அள்ளும் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக