தமிழுணர்வு !
பாடிப்பாடி நம்மொழிப் பரவச்செய்தல் நம்பணி ;
ஓடிஓடி செம்மொழி ஒளிரச்செய்தல் நம்வழி ;
நாடிநாடி நம்தமிழ் நாளுமோங்க செய்வோமே ;
கோடிகோடி தமிழரின் கொள்கைகொள்கை கொள்கையே !
பேசுகின்றோம் பிறமொழி பேச்சிலில்லை தமிழ்மொழி ;
வீசுகின்ற சொல்லிலும் வியன்றமிழும் இல்லையே ;
பூசிப்பூசி மழுப்பியே பொற்றமிழை அழிக்கிறார் ;
கூசிக்கூசிக் கூனிகுறுகி கொள்கைவிடுதல் எங்ஙனம் ?
எழுத்திலில்லை எந்தமிழ் இளைஞர்நாவில் இல்லையே ;
பழுத்தமூத்த மொழியினைப் பாரிலழிக்க லாகுமோ ?
கொழுத்தபகை வர்வன்மத்தால் குன்றலாமோ எம்மொழி ?
அழுத்தங்கொடுத்தே மீண்டும்நாம் அன்னைத்தமிழை நாட்டுவோம் !
வழக்குரைக்கும் அறமன்ற வழக்கிலில்லை எம்தமிழ் ;
முழக்குகின்ற வெளியெல்லாம் முத்தமிழைக் காணோமே ;
சுழலுகின்ற புவியிலே சூழ்ச்சியின் பிடிக்குள்ளே
உழலச்செய்தே தமிழினை ஒழித்தழிக்கப் பார்க்கிறார் !
அன்னைத்தமிழ் வாழ்த்தினை அவமதித்தே அமர்கிறார் ;
அன்னைஆண்டாள் பெயரிலே அடாவடிகள் செய்கிறார் ;
மண்ணொழிந்த வடமொழி மறுபிறவி எடுத்திட
எண்ணும்ஈனத் துறவியர் எழுச்சித்தமிழை மிதிக்கிறார் !
தாய்தடுத்தி டினும்விடோம்; தமிழழிப்போ ரைவிடோம் ;
ஏய்த்தவீணர் எவரையும் எளிதில்வாழ விட்டிடோம் ;
பொய்க்கவைத்தே சூதினைப் பொடிப்பொடிக ளாக்கியே
தாய்த்தமிழே வாழ்வுற தருவோமெங்கள் உயிரையே !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக