சுவடு
விடியலில் விழித்தெழுந்த
வைகறை புள்களின் கொஞ்சல்கள்
செவியேறும் பொழுது
உவகை பேரூற்றில்
உள்ளம் நனைகிறேன்
சிரிப்பை வாரிஇறைத்து
இன்றைய விடியலை வழியனுப்பும்
கொத்து மலர்களின் நீட்டங்கள்
ஒவ்வொரு புல்லும்
மகுடம் சூடிய மயக்கத்தில்
சாய்ந்து கிடக்கின்றன
பனி பருக
விழைகிறது கதிரவனின்
ஒளிக் கற்றை
மனத்தைத் துன்புறுத்தும்
கவலைகளை அனுமதிக்காத
இளங்காலை வேளை
தனித்த நடையில்
மகிழ்வை உணர்கிறேன்
இந்த நாளும் இனிதே
இரட்டிக்கும் நடையின் வேகம்
தடம் பதிக்கும்
காலடிச் சுவடுகளில்
புலப்படுகிறது நம்பிக்கையின்
ஆழம்
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக