"கட்டை விரலி"
(கதை பாடல்)
அன்னை ஒருத்தி வாழ்ந்தனள்
அழகு குழந்தை வேண்டியே ;
முன்னை இயற்கை கடவுளை
முனைந்து மூழ்கி வேண்டினள் ;
பின்னை அவளின் வேண்டுதல்
பிள்ளை யாக தோன்றியே
வண்ண மலரின் இதழிலே
வடிவில் குறைந்து தவழ்ந்தது ! (1)
கட்டை விரலின் அளவிலே
கண்டெ டுத்த மகவினைக்
'கட்டை விரலி' எனப்பெயர்
களிப்பில் உவந்து சூட்டினள்;
சொட்டுத் தேனின் பூவிலே
துவளுங் குழவித் தூங்கிடக்
கொட்டைப் பாக்குத் தோலிலே
குலுங்குந் தூளி செய்தனள் ! (2)
வெட்டுக் கிளிகள் எறும்புடன்
விரையும் பட்டாம் பூச்சிகள்
கட்டை விரலி நண்பராய்க்
கனிவு பொங்கக் கூடின ;
தோட்டம் முழுதுஞ் சுற்றியே
சோர்வி லாமல் நாளுமே
கொட்டம் அடித்து பாடியே
கூடி ஆடி மகிழ்ந்தன ! (3)
ஆடுங் கட்டை விரலியை
அழுக்குத் தவளை பார்த்தது
ஓடும் வழியை மறித்தவள்
ஒளிரும் எழிலில் கிளர்ந்தது;
கேடு கெட்ட எண்ணத்தில்
கிறங்கி தவளை விரலியைப்
பாடும் வாயால் கவ்வியே
பாய்ந்து நீரில் மறைந்தது ! (4)
வாடி எந்தன் செல்லமே
வருக எந்தன் இல்லமே
தேடி வந்தேன் மருமகள்
தேவன் எந்தன் மகனுக்குக்
கூடி உன்னை மணஞ்செய
கொண்டு வந்தேன்
நானடி
ஆடிப் பாடிக் கனவிலே
அழுக்குத் தவளை மிதந்தது ! (5)
தேடி வருவேன் மகனோடு
தேவி நீயுந் தாமரை
ஊடி வளரும் இலையிலே
ஒளிந்து நிற்பாய் வருகிறேன் ;
பேடி தவளை மறைந்தது
பேதை விரலி அழுதனள் ;
வாடி நின்ற விரலியை
வண்ண மீன்கள் சூழ்ந்தன ! (6)
அழுகை வேண்டாம் விரலியே
அன்பாய் மீன்கள் உதவுவோம் ;
முழுகுங் கமலத் தண்டினை
முந்தி மீன்கள் கடித்தன
வழுக்கி வீழ்ந்த தண்டிலை
வாகாய் ஓட மாக்கியே
முழுதுஞ் சுமந்து விரலியை
முடிவாய்க் கரையில் சேர்த்தன ! (7)
கறக்கும் மடியை முட்டிடும்
கன்று போல விரலியை
பறக்கும் பட்டாம் பூச்சிகள்
படையெ டுத்து சூழ்ந்தன ;
மறந்தி டாமல் விரலிக்கு
மனது வைத்து உதவின;
சிறந்த நட்பின் சின்னமாய்ச்
சிறகை அடித்து மகிழ்ந்தன ! (8)
பட்டாம் பூச்சி தகவலால்
பறந்து வந்த சிள்வண்டு
விட்டி டாமல் விரலியை
விரைந்து சென்று மீட்டது ;
கட்டித் தழுவி விரலியோ
கண்ணீர் மல்க நன்றியை
ஒட்டு மொத்த மாகவே
உதவி னோர்க்கே ஈந்தனள் !
- இராதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக