வசந்தம்
மெதுவாய் தடம்பதித்து
படிகளில் இறங்குகிறேன்
நீண்டுபோய் நிறுத்துகிறது
வறட்சி வரைந்த கோலங்களில்
காணக் கிடைக்கின்றன
கெட்டியும் ஆம்பலும்
எச்சங்களாய்
அறுநீர்ப் பறவைகளின்
நடமாட்டமில்லை
இடம்பெயர்ந்து விட்டன
தவளை சத்தங்கள்
மூலையில்
காய்ந்த முட்புதரில்
எட்டித் தலையாட்டும்
வயிறொட்டிய ஓணான்
வெயில் நாக்கு தீண்டியதில்
தீண்டாமையால் தவிக்கிறது
கேட்பாரற்றுக் குளம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்த்
தூறல்
மண்ணின் மணம்
பரவுகிறது
மெல்ல செவியடைகிறது
தூரத்து இடி முழக்கம்
நம்பிக்கையில் படியேறுகிறேன்
மறுபடியும்
தாமரை இலைகளில்
பாதரசத் துண்டங்களாய்
நீர்த் திவலைகள்
உருளும்
வசந்தம் திரும்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக