தொடர்வண்டி
'தடதட' 'கடகட' தொடர்வண்டி
தாளங்கள் போட்டிடும் தொடர்வண்டி ;
அடர்நிலை காடுகள் உள்நுழைந்தே
அழகிய இயற்கையின் முகங்காட்டும் ;
வடம்பிடிக் கயிறென உடல்நீண்டு
வளைவொடும் நெளிவொடும் பயணமிடும் ;
'மடமட' மடவென மைல்கடக்கும்
மனம்போல விரைந்திடும் தொடர்வண்டி !
மலைமேலே முகடுகள் ஊர்ந்தேறும்
மடுவுகள் அடைந்திட வழிந்தூரும்
அலைபடக் காற்றினைக் கிழித்தேகி
அடைந்திடும் இலக்கினைத் தொடர்வண்டி ;
உலைபட்ட இரும்புத்தண் டவாளத்தில்
உறுதியாய் இயங்கிடுந் தொடர்வண்டி ;
நிலையங்கள் நேரத்தில் சென்றடையும்
நின்றுபின் பயணத்தைத் தொடர்ந்துவிடும் !
- இராதே
27.12.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக