இரவச்சம்
உள்ளவற்றை மறைக்கின்ற நோக்கம் இன்றி
உதவிடவே இருக்கின்றார் செல்வர் என்றே
பள்ளத்தில் பாய்கின்ற நீரைப் போலே
பரிவுடனே கையேந்தி கேட்டல் தீதே !
வெல்லத்தை நாடுகின்ற எறும்பைப் போன்றே
வேண்டிவேண்டி இரப்பதுவும் நன்றும் அன்றே;
செல்வங்கள் இல்லாத நிலையில் கூட
சென்றெங்கும் இரவாமை சிறப்பின் மேன்மை !
கையேந்திப் பிச்சையினைக் கேட்போர் காணின்
கண்துளிர்க்கும் கல்மனமும் கரையுந் தேம்பும்;
பொய்யேந்தி மறைக்கின்ற பொல்லாச் செல்வர்
பொருளனைத்தும் பயனின்றிப் பாழாய்ப் போகும்;
நொய்யரசி கஞ்சியதே உணவா னாலம்
நுகர்கின்ற உழைப்பாலே கிடைத்தால் இன்பம் ;
பொய்ப்பேசி ஊரெல்லாம் இருகை நீட்டிப்
புகழ்ப்பிச்சை எடுப்பதுவே வாழ்வின் துன்பம் !
இழிநிலையே நேரிடினும் இரக்கம் இல்லார்
இல்லத்தில் பிச்சையினைக் கேட்க வேண்டாம் ;
பொழிகின்ற செல்வங்கள் மறைக்குந் தீய
பொல்லாதார் பொருள்கேட்டே அலைய வேண்டாம் ;
பழிமிரட்டும் தீச்செயல்கள் தீர நாளும்
பல்லிளித்து பிச்சைதனை எடுத்தல் என்றே
மொழிகின்ற மூடத்தன முட்டாள் கூற்றால்
முடங்கிடுமே மானமுமே பிச்சை கேட்டால் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக